Like Us On Facebook

Responsive Advertisement
Responsive Advertisement
 அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.




தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் கோவிட்-19 தொற்றால் மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக வீட்டிலிருந்த படியே கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆன்லைன் வாயிலாக, கல்வி தொலைக்காட்சி, யூ-டியூப் சேனல், வாட்ஸ்-அப் வீடியோக்கள் மூலம் பாடம் எடுக்கப்பட்டது.

இதன்மூலம் மாணவர்கள் முறையாக கல்வி கற்கிறார்களா என்று வீட்டுப் பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள் ஆகியவற்றின் மூலம் ஆசிரியர்கள் உறுதிப்படுத்திக் கொண்டனர். நடப்பாண்டின் தொடக்கம் முதல் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வருவதை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பில் அரசு தீவிரம் காட்டியது. அதன்படி ஜனவரி 19ஆம் தேதி 10 மற்றும் 12ஆம் வகுப்பிற்கும், பிப்ரவரி 8ஆம் தேதி 9 மற்றும் 11ஆம் வகுப்பிற்கும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த சூழலில் சில பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உடனே சம்பந்தப்பட்ட பள்ளி சீல் வைக்கப்பட்டு உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கிடையில் 9 முதல் 11ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்று தமிழக அரசு அறிவித்தது. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் மே 3ஆம் தேதி முதல்
பொதுத்தேர்வு நடத்தும் வகையில் அட்டவணை வெளியிடப்பட்டது. இதையொட்டி மாணவர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் கோவிட்-19 தொற்று கிடுகிடுவென அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இதனால் 9 முதல் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. மீண்டும் வீட்டிலிருந்த படியே ஆன்லைன் வாயிலாக கல்வி கற்க அறிவுறுத்தப்பட்டது. மேலும் தமிழகத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், கால்நடை கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளும் மூடப்பட்டன. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை திட்டமிட்டபடி நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தேர்வை ஒத்தி வைக்கலாம் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடத் தொடங்கியுள்ளனர். இந்த சூழலில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை மே மாத இறுதியில் அல்லது ஜூன் மாதத்தில் நடத்தலாம் என்று
தேர்வுத்துறை ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்குள் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி போடப்பட்டு விடும் என்று தமிழக அரசு கருதுகிறது. எனினும் பொதுத்தேர்வு ஒத்திவைப்பது தொடர்பாக அரசு தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை. பொதுத்தேர்விற்கு 12ஆம் வகுப்பு மாணவர்கள் தொடர்ந்து தயாராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post