கொரோனா தொற்று பரவுவதைக் கருத்தில் கொண்டு பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவில்லை. 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
இவர்கள் போதிய சரீர இடைவெளி விட்டு, முகக்கவசம் அணிந்து கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த சூழலில் தஞ்சாவூரில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர், மாணவிகளுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக சம்பந்தப்பட்ட பள்ளி சீல் வைக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் நேற்று ஆலோசனை நடத்தினார்.
அதில் பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதன்படி, அனைத்து பள்ளிகளிலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.
பள்ளிக்கு வரும் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவதை கண்காணிக்க வேண்டும்.
வகுப்பறைகள், மாணவர்கள் அதிகம் கூடும் இடங்களை தினமும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
கொரோனா அறிகுறி இருக்கும் மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்கக் கூடாது.
அவர்களை வீட்டிலேயே இருக்க அறிவுறுத்த வேண்டும்.
மேலும் அறிகுறி இருக்கும் ஆசிரியர்கள் மற்றவர்களுடன் சேராதவாறு தனியாக வேண்டும். தொற்று இருந்தால் உடனே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.