Like Us On Facebook

Responsive Advertisement
Responsive Advertisement

 கர்ணன் படத்தில் "பண்டாரத்தி" பாடலை நீக்கும் வரை படத்தை வெளியிட தடை கோரிய வழக்கில் நடிகர் தனுசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.





நடிகர் தனுஷ் நடித்த கர்ணன் படத்தில் பண்டாரத்தி பாடலை, படத்திலிருந்து நீக்கவும் அதுவரை படத்தை வெளியிட இடைக்கால தடை கோரி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


நடிகர் தனுஷ், பாடலாசிரியர் யுகபாரதி, பாடலைப் பாடிய தேவா, கர்ணன் திரைப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, தணிக்கைத்துறை மண்டல அலுவலர், ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

விருதுநகர் பகுதியை சேர்ந்த ராஜா பிரபு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

Karnan banner




அதில், "கடந்த ஜனவரி 19ஆம் தேதி இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில், கலைப்புலி தாணு தயாரிப்பில் "கர்ணன்" திரைப்படத்தின் டீசரும் "கண்டா வரச்சொல்லுங்க" எனும் பாடலும் யூ சான்றிதழ் அனுமதியுடன் வெளியிடப்பட்டது. அதேபோல "பண்டாரத்தி" எனும் பெயரில் பாடல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பாடலில் "பண்டாரத்தி என் சக்காளத்தி" எனும் வரிகள் இடம்பெற்றுள்ளன. ஆண்டி பண்டாரம் என்பது மிகவும் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த ஒரு சமூகம். இந்துக்களைப் பொறுத்தவரை பெண்களை மரியாதையாக அம்மா என்று அழைத்து வருகின்றனர் இந்த நிலையில் கர்ணன் படத்தில் எங்களது இன பெண்களை இழிவுபடுத்தும் விதமாக வார்த்தைகள் அமைந்துள்ளது. மேலும் எங்கள் சமூகத்தை காயப்படுத்தும் விதமாக கர்ணன் திரைப்படத்தில் பண்டாரத்தி புராணம் பாடல் இடம்பெற்றுள்ளது. இது விதிகளுக்கு எதிரானது. மேலும் முறையான அனுமதி சான்றிதழ் பெறாமல் "பண்டாரத்தி என் சக்காளத்தி" என்ற பாடல் யூடியூப் சேனலில் வெளியாகியுள்ளது. இது சட்டவிரோதமானது. ஆகவே, "பண்டாரத்தி" பாடலை கர்ணன் படத்திலிருந்து நீக்கும் வரை படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கவும்,

"பண்டாரத்தி" பாடலை நீக்கிய பிறகு படத்தை வெளியிட உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.


அப்போது நீதிபதிகள் வழக்கு குறித்து நடிகர் தனுஷ், பாடலாசிரியர் யோக பாரதி, பாடலைப் பாடிய தேவா, கர்ணன் திரைப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, தணிக்கைத்துறை மண்டல அலுவலர், ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Post a Comment

Previous Post Next Post