Like Us On Facebook

Responsive Advertisement
Responsive Advertisement

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா என்ற கேள்விக்கு வதந்திகளை நம்பாதீர்கள் என்று சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் பதில் அளித்துள்ளார்.


இந்தியாவில் மகாராஷ்டிரா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா தொற்று மீண்டும் வேகமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் நேற்று அவசர ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் பொதுமக்கள், முகக்கவசம் மற்றும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறும்போது, ''மக்கள் அனுமதிக்கப்பட்ட பொது இடங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். காய்ச்சல் உள்ளவர்கள் பள்ளிகள் உள்ளிட்ட பொது இடங்களுக்குச் செல்லக்கூடாது. முதலில் சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். காய்ச்சல் உறுதி செய்யப்பட்டால் உடனடியாகத் தனிமைப்படுத்தப்பட வேண்டும்,

வங்கிகள், விடுதிகள், உணவகங்கள், சந்தைகள், அனைத்து மதச்சார்பற்ற கூட்டங்கள், கலாச்சாரக் கூட்டங்கள், போக்குவரத்து ஆகியவற்றில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

அதேபோலத் தற்போது கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தக் கூறியுள்ளோம். இதனால் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கலாம். எனினும் தொற்று பாதிப்பைக் குறைக்க முடியும். இதற்கு முதலாவதாக முகக் கவசம் கட்டாயம். அடுத்ததாக, மக்கள் வீட்டுத் தனிமையைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். பாதிப்பு குறைவாக உள்ள அவர்களால் பிறருக்குத் தொற்று ஏற்படுகிறது. நோய் உறுதியானால் மருத்துவமனைக்குச் சென்றுவிட வேண்டும். அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கப்படுகின்றது. தற்போது படுக்கைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

பள்ளிகளை மூடுவது குறித்து பொது சுகாதார வல்லுநர்கள், பள்ளிக் கல்வித்துறை, தலைமைச் செயலர் ஆகியோர்தான் முடிவெடுக்க வேண்டும். வதந்திகளை விடுத்து இந்த நேரத்தில் அதிகாரபூர்வமான தகவல்களை மட்டுமே பகிர வேண்டும்'' என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ''அதை அறிவிக்கும் அதிகாரிகள் நாங்கள் இல்லை. வதந்திகளை நம்பாதீர்கள். ஆனால், தயவுசெய்து அனைவரும் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். தொற்று ஏறுமுகமாக உள்ளதால் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இதில் யாரும் அலட்சியம் காட்டக் கூடாது'' என்று தெரிவித்தார். .



Previous Post Next Post