Like Us On Facebook

Responsive Advertisement
Responsive Advertisement

 கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் சட்டமன்றத் தேர்தலை எப்படி நடத்துவது என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.




கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டிலும் பொது முடக்கம் அமல்படுத்த வாய்ப்பு உள்ளதோ என்று மக்கள் தொடர்ந்து சந்தேகம் எழுப்புகின்றனர்.

இந்நிலையில் நாடு முழுவதும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகளால் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சரவையைக் கூட்டி பிரதமர் மோடி ஆலோசித்து வருகிறார்.

இந்த சூழலில் தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்ற பொதுத் தேர்தல்களை நடத்தி முடிக்க வேண்டிய பெரிய சவால் தேர்தல் ஆணையம் வசம் உள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகமாக இருந்தபோது பீகாரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சட்டமன்ற தேர்தல் மூன்று கட்டங்களாக நடத்தப்பட்டது. பீகாரில் நாளொன்றுக்கு 12 ஆயிரம் பேருக்கு நோய்த் தொற்றிருந்த நேரத்தில் அங்கு தேர்தல் நடத்தப்பட்டிருந்தது. ஆனாலும் தேர்தலினால் தொற்று பரவாமல் வெற்றிகரமாக தேர்தல் நடத்தப்பட்டது.

தமிழகத்தில் தற்போது நாள் ஒன்றுக்கு ஆயிரம் பேருக்கு மேல் தொற்று ஏற்படுகிறது. இங்கும் பீகாரில் கடைபிடிக்கப்பட்ட அதே கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது பற்றி அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

அதன்படி, ஒவ்வொரு தேர்தல் நடவடிக்கையின் போதும் ஒவ்வொருவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். தேர்தல் தொடர்பான ஒவ்வொரு அறை, அரங்கங்கள், வளாகங்கள் அனைத்தும் தொற்று பரவல் தடுப்புக்கான வகையில் சீர்படுத்தப்பட வேண்டும்.

*உடல் வெப்ப பரிசோதனை, கிருமி நாசினி, சோப், தண்ணீர் வசதி இருந்தாக வேண்டும்.

*சமூக இடைவெளி உள்ளிட்ட மாநில அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட வேண்டும்.

*கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக மாநில, மாவட்ட மற்றும் தொகுதி அளவிலான ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்.

*எலக்ட்ரானிக் வாக்கு எந்திரம், விவிபேட் எந்திரம் ஆகியவற்றை கையாளும் அனைவரும் கையுறை அணிந்திருக்க வேண்டும்.

*பயிற்சி அளிக்கும் வகுப்புகள் அனைத்தும் பெரிய அரங்கங்களில் நடத்தப்பட வேண்டும். அதிகாரிகளுக்கு இடையேயான பயிற்சிகள், ஆன்லைனில் நடத்தப்படலாம்.


*வாக்குப்பதிவின் போது கொரோனா தொற்று அறிகுறிகள் தெரியவரும் தேர்தல் அலுவலரை உடனடியாக அப்புறப்படுத்திவிட்டு அவருக்கு பதிலாக பணியாற்றக் கூடிய அலுவலரை இருப்பில் வைத்திருக்க வேண்டும்.

Post a Comment

Previous Post Next Post