Like Us On Facebook

Responsive Advertisement
Responsive Advertisement

 தேர்தல் பிரச்சாரத்தின் போது பொதுமக்கள் கேட்ட சரமாரி கேள்விகளால் சபாநாயகர் தனபால் வேகமாக புறப்பட்டுச் சென்றுள்ளார்.




தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரேகட்டமாக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. அவிநாசி (தனி) சட்டமன்ற தொகுதியில் தற்போதைய சட்டமன்றத்தின் சபாநாயகரும், அதிமுக மூத்த தலைவருமான பி.தனபால் போட்டியிடுகிறார். இவர் கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆகியிருக்கிறார்.

எனவே மீண்டும் போட்டியிட அதிமுக தலைமை வாய்ப்பு வழங்கியுள்ளது. திமுக சார்பில் ஆர்.அதியமான், மக்கள் நீதி மய்யம் சார்பில் டாக்டர் ஏ.வெங்கடேஸ்வரன், அமமுக சார்பில் எஸ்.மீரா, நாம் தமிழர் சார்பில் ஷோபா உள்ளிட்டோர் அவிநாசி (தனி) தொகுதியில் போட்டியிடுகின்றனர். 

இந்நிலையில் அவிநாசி தொகுதி அன்னூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பசூரில் அதிமுக வேட்பாளர் பி.தனபால் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்கள் சிலர் அவரை சூழ்ந்து கொண்டனர்.

இதையடுத்து பல்வேறு குறைகளை எடுத்துரைத்தனர். அதாவது, எங்களுக்கு வீடு கட்டித் தர வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் நிறைவேறவில்லை. கூட்டுறவு சங்கத்தில் கேட்டால் சொத்து ஜாமீன் வேண்டும் என்று அலைக் கழிக்கின்றனர். எங்கள் பகுதியில் குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. இதனை தீர்க்க பலமுறை கோரிக்கை வைத்து விட்டோம். ஆனால் தமிழக அரசு சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ரேஷன் கார்டு வேண்டும் என்று விண்ணப்பித்து பல மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் இன்னும் எங்களுக்கு கிடைக்கவில்லை என்று சரிமாரியாக புகார்களை முன்வைத்தனர். உடனே அன்னூர் சேர்மேனை கவனிக்கச் சொல்கிறேன் என்று சமாளித்தார். 

ஆனால் அப்பகுதி மக்கள் தனபாலை விட்டபாடில்லை. தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எங்களுக்கு ஒரு தீர்வு சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு செல்லுமாறு விடாப்பிடியாக இருந்தனர்.

இதையடுத்து தனது பேச்சை சுருக்கமாக முடித்துக் கொண்டு பிரச்சார வாகனத்தில் இருந்து கீழே இறங்கினார். சம்பந்தப்பட்ட ஊராட்சி தலைவரிடம் பொதுமக்களின் குறைகள் பற்றி விசாரிக்குமாறு அதிமுக நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

 அடுத்த முறை பிரச்சாரத்தை முறையாக ஏற்பாடு செய்யுங்கள் என்று கடிந்து கொண்டு சபாநாயகர் தனபால் வேறு வாகனத்தில் புறப்பட்டுச் சென்றுவிட்டார். இந்த சம்பவம் அன்னூர் பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Post a Comment

Previous Post Next Post